நடிகர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வலது காலில் 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னடி நடிகராக இருந்த விஜயகாந்த், கடந்த 2015 ஆம் ஆண்டுடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.
அதற்கும் முன்னதாகவே அரசியலில் களமிறங்கி, தமிழக அரசியலில் தேமுதிகவை 3 வது பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மெல்ல கட்சிப் பணிகளில் இருந்து விலக ஆரம்பித்தார்.
கம்பீரமான தோற்றத்துடன் எப்போதும் காணப்பட்ட அவர் , அண்மையில் வெளியான ஒரு புகைப்படத்தில் மெலிந்த உடல் வாகுடன் காணப்பட்டது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் கவலையடையச் செய்தது.
அவ்வப்போது கேப்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், ஓரிரு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவதும் ஊடகங்களில் செய்திகளாக வெளிவரும். இந்நிலையில் விஜயகாந்த் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரின் வலது கால்களில் உள்ள மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ரசிகர்களையும், தொண்டர்களையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.