பேப்பர் படித்தால் தான் தெரியும்... முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வது அரசின் நோக்கம் அல்ல என்றும், தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
காவிரி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு
மேகதாது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதாகவும், மத்திய அரசின் தரப்பில் முழுமையான விளக்கம் கிடைக்காத நிலையில், மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் முதலமைச்சர் விளக்கினார்.
காவிரி பிரச்சினையை பெருமை அல்லது அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், தமிழக மக்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியாகவே பெங்களூரு செல்ல முடிவு செய்ததாக கூறிய அவர், பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதில் ஏதேனும் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். குறுவை சாகுபடி நிவாரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், குறுவை சாகுபடிக்கான நிவாரணத் தொகுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசு வழங்கியது சிறப்பு தொகுப்பு என்றும், தற்போது விவசாயிகள் கோருவது வறட்சி நிவாரண நிதி என்றும் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.
விவசாயிகளையும், அனைத்து கட்சிகளையும் சந்தித்து நிலைமையை அறிய வேண்டும் என்றும், வறட்சி நிவாரணம் தொடர்பாக அரசு ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய அவை தலைவர் செங்கோட்டையன், வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என விளக்கம் அளித்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |