உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உளுத்தங்களி: எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?
உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு மிகவும் சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது,
மேலும், உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த உளுத்தங்களியை சாப்பிட்டால் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
இந்த உளுத்தங்களியை காலையில் அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம்.
இப்போது உளுந்தங்களி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- உளுத்தம் பருப்பு - 3/4 கப்
- கருப்பட்டி - 1 1/2 கப்
- தண்ணீர் - 3 கப்
- நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டியை கரைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, ஒரு வாணலியில் ஊற்ற வேண்டும்.
பின்பு அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். வெல்லப்பாகு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மாவை மெதுவாக தூவி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும்.
அப்படி கிளறும் போது, களியை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும். களி கெட்டியானதும், அதில் எண்ணெயை ஊற்றி கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அந்த களியை எண்ணெய் பயன்படுத்தி சிறு உருண்டைகளாக உருட்டினால், சத்தான உளுந்தங்களி தயார்.