விமானப் பயணத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாமா? திரிஷாவின் வைரல் செல்ஃபிக்கு மருத்துவர் விளக்கம்
சமீபகாலமாக சருமம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக, திரைப்பட நட்சத்திரங்களின் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் சருமப் பராமரிப்பு வழக்கங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், சருமப் பராமரிப்பு என்பது காலை, மாலை நடைமுறைகளில் மட்டும் முடிவதில்லை. வீட்டில் சீரம், மாய்ஸ்சரைசர், ஷீட் மாஸ்க், சன்ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன், சில பிரபலங்கள் விமானப் பயணத்தின்போதும் சருமப் பராமரிப்பை தொடர்கின்றனர்.

த்ரிஷா பயன்படுத்திய ஷீட் மாஸ்க்: சமீபத்தில் நடிகை திரிஷா, விமானத்தில் ஷீட் மாஸ்க் அணிந்தபடி எடுத்த செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது வைரலானது. இதேபோல், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் விமானப் பயணங்களின்போது ஷீட் மாஸ்க் பயன்படுத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
இதனால், "விமானப் பயணத்தின்போது ஷீட் மாஸ்க் பயன்படுத்துவது உண்மையில் அவசியமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு அகியா எஸ்தெடிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை தோல் மருத்துவரான டாக்டர் ரூபிகா சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவ விளக்கம்
விமானப் பயணங்களில் ஈரப்பதமூட்டும் ஷீட் மாஸ்க் அல்லது ஜெல் அடிப்படையிலான மாஸ்க் பயன்படுத்துவது பாதுகாப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, விமானத்தின் வறண்ட சூழலில் இவை சருமத்திற்கு தற்காலிக ஈரப்பதத்தை வழங்குகின்றன. ஹைலூரோனிக் அமிலம், செரமைடுகள், கிளிசரின், கற்றாழை, பாந்தெனால் போன்ற பொருட்கள் உள்ள மாஸ்குகளைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
அதேநேரம், சருமத்தை உரிக்கும் இரசாயனங்கள், கரி (Charcoal) மாஸ்குகள், வீரியமான ஆக்டிவ்கள் மற்றும் பீல்-ஆஃப் மாஸ்குகளைப் பயணத்தின் போது தவிர்க்க வேண்டும். இவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
பயன்கள்
ஷீட் மாஸ்க் சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுத்து, இறுக்கமான உணர்வைக் குறைக்கிறது. நீண்ட விமானப் பயணத்திற்குப் பிறகும் சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும், விமானத்தின் குறைந்த ஈரப்பதத்தால் ஏற்படும் சரும நீரிழப்பையும் குறைக்கிறது. சிறந்த பலனுக்கு, மாஸ்க் பயன்படுத்தும் முன் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். தயாரிப்பில் குறிப்பிடப்பட்ட நேரத்தை (பொதுவாக 15–20 நிமிடங்கள்) மீறி மாஸ்கை அணியக்கூடாது.
அகற்றிய பிறகு மீதமுள்ள சீரத்தை மெதுவாக மசாஜ் செய்து, மாய்ஸ்சரைசர் மற்றும் குறைந்தது SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது.
பொதுவாக ஷீட் மாஸ்குகள் பாதுகாப்பானவை. ஆனால், ஏற்கனவே சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தோல் மருத்துவரின் ஆலோசனையின்படி தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது என விளக்கம் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |