Kara Adai: தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் கார அடை
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் அனைவருக்குமே பிடிக்கும். ஒவ்வொரு உணவுகளையும் ஒவ்வொரு இடத்தில் சிறப்பாக சமைப்பார்கள்.
அப்படி தஞ்சாவூரின் பல புகழ்பெற்ற உணவுகளில் கார தோசை அல்லது கார அடை அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒரு உணவாக இருக்கின்றது.
நாவூரும் சுவையில் அசத்தலான கார அடையை வீட்டிலேயே எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
இட்லி அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
வர மிளகாய் - 8
சோம்பு - 1தே.கரண்டி
துருவிய சுரைக்காய் - கால் கப்
துருவிய தேங்காய் - கால் கப்
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தே.கரண்டி
உப்பு -தேவைக்கேற்ற
நல்லெண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுந்து பருப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குறைந்தது 5 மணிநேரம் வரையில் நன்கு ஊறவிட வேண்டும்.
இவை நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக பதத்தில் சற்று கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த மாவுடன், அரை கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1/4 கப் துருவிய சுரைக்காய், 1/4 கப் துருவிய தேங்காய், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1 ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு மணிநேரம் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் தோசைக்கலை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், அதில் அடை மாவை விரும்பிய வடிவில் மெலிதாகவோ அல்லது கெட்டியாகவோ ஊற்றி கொள்ள வேண்டும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டிற்கு மாற்றிவிட்டால் அவ்வளவு தான் தஞ்சாவூர் பாணியில் சுவையான கார அடை தயார். இந்த அடைக்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி அட்டகாசமான சுவையை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |