நாவூரும் சுவையில் வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - பண்ணலாமா?
ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவுகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும் மட்டன் என்றால் சொல்லவே வேண்டாம்.
வழக்கமான மட்டன் குழம்பைச் செய்து சலித்துவிட்டீர்களா? இந்த ஞாயிற்றுக்கிழமை மணமும், காரமும், மசாலா சுவையும் நிறைந்த அரைத்த மட்டன் தண்ணிக் குழம்பைச் செய்து பாருங்கள்.

ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்தக் குழம்பை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி மட்டுமின்றி, சூடான சாதத்துடனும் அருமையாக இருக்கும். இந்தச் சுவையான மட்டன் குழம்பை எளிய முறையில் படிப்படியாக எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10-15
வரமிளகாய் - 3
காஷ்மீரி மிளகாய் - 2
ஜாதிபத்திரி - சிறிய துண்டு
பட்டை - 1 துண்டு
கருப்பு ஏலக்காய் - 1
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மட்டன் - 1/2 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைத்த மசாலா
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
பின்னர் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், ஜாதிபத்திரி, பட்டை, கருப்பு ஏலக்காய், மல்லி விதைகள், கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.

அடுத்து நறுக்கிய தேங்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையை ஆறவிட வேண்டும்.
ஆறிய மசாலா கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது குக்கரில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் கழுவி சுத்தம் செய்த மட்டனைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும்.
மட்டனிலிருந்து தண்ணீர் வெளியேறும் வரை சிறிது நேரம் வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மிதமான தீயில் 4–5 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், சுவையான, மணமணக்கும் வறுத்தரைத்த மட்டன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |