நாவில் எச்சில் ஊற வைக்கும் பச்சை மாங்காய் தேங்காய் சட்னி - பண்ணலாமா?
Delicious Raw Mango Coconut Chutney Recipe : புளிப்புச் சுவை கொண்ட பச்சை மாங்காயையும், தேங்காயையும் சேர்த்து தயாரிக்கும் இந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
மாங்காயின் இயற்கையான புளிப்புச் சுவையும், தேங்காயின் இனிமையான மணமும் சுவையும் ஒன்றோடொன்று கலந்து, நாவில் நீர் ஊற வைக்கும் தனித்துவமான சுவையை வழங்குகின்றன.

குறிப்பாக, இட்லி, தோசை, உப்புமா, பணியாரம் போன்ற காலை மற்றும் மாலை நேர உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
வழக்கமாகச் செய்யும் தேங்காய் சட்னியிலிருந்து சற்று மாறுபட்ட இந்த மாங்காய் தேங்காய் சட்னி, சுவையில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் மிகவும் எளிமையானது.
அதிக நேரமோ, அதிகப் பொருட்களோ தேவையில்லை. வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே குறுகிய நேரத்தில் இந்தச் சுவையான சட்னியைத் தயாரித்துவிடலாம். இந்த அசத்தல் சட்னியின் எளிமையான செய்முறை விளக்கத்தை இந்த பதிவில் பார்க்லாம்.

தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – ½ கப்
பச்சை மாங்காய் – ¼ கப்
இஞ்சி – ½ அங்குலத் துண்டு
புளி – சிறிய துண்டு (விருப்பப்பட்டால்)
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை
முதலில் பச்சை மாங்காயின் தோலை நீக்கி, கொட்டையை அகற்றவும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து , மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், நறுக்கிய மாங்காய், இஞ்சி, காய்ந்த மிளகாய், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அனைத்தையும் ஒன்றாக அரைத்து, சட்னியை மிகவும் நைசாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து, இந்தத் தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி நன்றாகக் கலந்துவிட்டால் அவ்வளவு தான் சுவையான பச்சை மாங்காய் தேங்காய் சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |