நாக்கில் அரிப்பு ஏற்படாத சேனைக்கிழங்கு வறுவல்... கல்யாண வீட்டு ஸ்டைல்ல இப்படி செய்து பாருங்க
Elephant Yam Fry: சேனைக்கிழங்கு வறுவல் நாக்கு அரிப்பு ஏற்படாமல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
அசைவ சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் கல்யாண வீடுகளில் செய்திருப்பதை நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் சேனைக்கிழங்கு என்றால் பலரும் சாப்பிடுவதற்கு அதிகமாக யோசிப்பார்கள்.
காரணம் சேனைக்கிழங்கினை சாப்பிட்ட பின்பு நாக்கில் ஏற்படும் அரிப்பு தான். அவ்வாறு நாக்கில் எந்தவொரு அரிப்பு ஏற்படாமல் கல்யாண வீடுகளில் செய்யும் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு
சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன்
புளிச்சாறு - 1/2 கப் (எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து எடுத்தது)
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
வேக வைத்த சேனைக்கிழங்கு
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறி மசாலா/சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் சேனைக்கிழங்கினை தோல் நீக்கிவிட்டு, ஓரளவு சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குக்கர் ஒன்றில் தண்ணீர் சேர்த்து, அதனுடன் சேனைக்கிழங்கை சேர்க்கவும்.
பின்பு மஞ்சள் தூள், உப்பு, புளிச்சாறு சேர்த்து குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும். கிழங்கை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும், கடுகு, சோம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்க்கவும். 3-4 நிமிடம் வதக்கிய பின்பு, மஞ்சள் தூள் மற்றும் கறி மசாலா அல்லது சிக்கன் மசாலாவை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
கிழங்கு நல்ல மொறுமொறுவென்று மாறும் வரை வதக்கி இறக்கினால் கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |