இந்த மூன்று பொருட்களை சேர்த்து சட்னி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இட்லி,தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்து உணவுகளுடனும் சட்னி மிகச்சிறந்த வகையில் பொருந்தும்.
சாப்பாடுக்காக சட்னி வைத்துக்கொள்பவர்களை விடவும் சட்னிக்காகவே சாப்பாட்டை சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.
அப்படி சட்னி பிரியர்களை குஷியாக்கும் வகையில் ஒருமுறை கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகிய மூன்றையும் சேர்த்து அசத்தலான கலவை சட்னி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சட்னியின் ப்ளேவருக்கே வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடியளவு
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பல்
இஞ்சி - 4 சிறிய துண்டு
நாட்டு தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 15 இலைகள்
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதில் கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக 1 நிமிடம் வரையில் வதக்கி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறிவிட்டு இறக்கி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கலவை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |