நாவூரும் சுவையில் சில்லி பன்னீர்... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பன்னீரில் அதிகளவில் கால்சியமும், புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றது.
இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் பெரிதும் துணைப்புரிகின்றது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும் . பன்னீரை பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிடுவது வழக்கம். சற்று வித்தியாசமாக நாவூரும் சுவையில் சில்லி பன்னீர் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
பூண்டு - 6
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 தே.கரண்டி
தக்காளி சாஸ் - 2 தே.கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 1 தே.கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - 1தே.கரண்டி
சோயா சாஸ் - 2 தே.கரண்டி
வினிகர் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு
பொரிக்க தேவையானவை
மைதா - 3 தே.கரண்டி
சோள மாவு - 6 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ½ தே.கரண்டி
மிளகு தூள் - 2 தே.கரண்டி
சோயா சாஸ் - 1 தே.கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து அதில் பன்னீரை போட்டு சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.
பின்னர் மைதா மற்றும் சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் மிளகு தூள், உப்பு, சிறிது சோயா சாஸ் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ,தேவையான அளவு நீர் ஊற்றி கெட்டியான கலவையாக நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பன்னீர் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், கிரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இதனை நன்றாக நன்கு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பன்னீர் பொரித்து மிஞ்சிய எண்ணெயில் பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாய், சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
இறுதியாக மிளகாய் தூள் மற்றும் சாஸ் கலவை சேர்த்து நன்கு கலந்து, பின்பு பொரித்த பன்னீர் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால் அசத்தல் சுவையில் சில்லி பன்னீர் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
