மொறு மொறு சுவையில் பீட்ரூட் பொரியல்... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே காய்கறிகளையும் பழங்களையும் தினசரி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்தது தான்.
அந்தவகையில்,எல்லா காய்கறிகளை போல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் ஒரே முறையில் இதை சமைத்துக்கொடுப்பதால் சிலருக்கு பீட்ரூட்டே பிடிக்காமல் போய்விடக்கூடும்.
இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்டும் வகையில், சன்டே ஸ்பெஷலாக அசத்தல் சுவையில், பீட்ரூட் பொரியல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
எண்ணெய் - தேவையான அளவு
கடலை மாவு -1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
சோள மாவு - 1/2
மிளகாய் தூள் - 1 1/2
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு

செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து பிரெஞ்சு ப்ரைஸ்க்கு வெட்டுவதை போன்று நீளவாக்கில் பீட்ரூட்டை வெட்டிக் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1/2 கப் சோள மாவு ஆகியவற்றை எடுத்து, அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றாக கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் வெட்டி வைத்துள்ள பீட்ரூட்டையும் அதில் சேர்த்து முதலில் நன்றாக கிளறி விட்டு பின்னர் லேசாக தண்ணீரை தெளித்து தெளித்து, மாவு பீட்ரூட்டில் கோட்டிங் ஆகுமாறு பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிரட்டி வைத்துள்ள பீட்ரூட்டை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் தூவி, பொன்னிறமாக மாறும் வரையில், பொரித்துக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் இருந்து எடுக்கும் முன் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் எடுத்தால், அவ்வளவு தான் மொறு மொறுப்பான சுவையில் பீட்ரூட் பொரியல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |