காரசாரமான சுவையில் அசைவத்துக்கே டஃப் கொடுக்கும் சேப்பங்கிழங்கு சாப்ஸ்! பண்ணலாமா?
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் (Folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் காணப்படுகின்றது.
சேப்பங்கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவை சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

ஆனால் அதன் வளவளப்பு தன்மை காரணமாக பலரும் இதனை விரும்புவது கிடையாது. இந்த முறையில் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு தேவையானவை
சேப்பங்கிழங்கு - 500 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
பூண்டு - 5 பல்
இஞ்சி - 2 இன்ச்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
சின்ன வெங்காயம் - 10
காஷ்மீரி வரமிளகாய் - 5
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
வறுப்பதற்கு தேவையான அளவு
குழம்பு மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
உப்பு - 3/4 தே.கரண்டி
கடலை எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை
முதலில் சேப்பங்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதை குக்கரில் போட்டு, கிழங்கு முழுவதும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் முழுமையாக இறங்கியதும் குக்கரைத் திறந்து, கத்தியால் கிழங்கை குத்திப் பார்க்கவும். கத்தி எளிதாக உள்ளே சென்றால், கிழங்கு நன்றாக வெந்துவிட்டது என்று அர்த்தம்.
பிறகு கிழங்கின் தோலை நீக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சின்ன வெங்காயம், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த சேப்பங்கிழங்கை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் குழம்பு மிளகாய்த் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, அனைத்து பொருட்களும் கிழங்கின் மீது நன்றாக ஒட்டும் வகையில் கைகளால் மெதுவாக பிரட்டிக் கலக்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், மசாலா தடவிய சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்த்து, மேலே கறிவேப்பிலை தூவி நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
குறைந்த தீயில் சுமார் 5–7 நிமிடங்கள் வதக்கி, இடையிடையே பிரட்டவும். சேப்பங்கிழங்கு பொன்னிறமாக மாறி மொறுமொறுப்பாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கினால் அவ்வளவு தான் அசைவத்துக்கே டஃப் கொடுக்கும் சுவையில் சேப்பங்கிழங்கு சாப்ஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |