நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கீரை கூட்டு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே ஆரோக்கியமான உணவு வகைகளின் பட்டியலில் நிச்சயம் கீரை வகைகள் முக்கிய இடத்தை பிடித்துவிடும்.
ஆனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பலரும் கீரையை தங்களின் உணவு தட்டில் ஒதுக்கி வைத்துவிடுவது வழக்கம்.
பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் ஒருங்கே கொண்டுள்ள கீரை வகைகளை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில், சற்று வித்தியாசமான முறையில் அருமையான சுவையில் கீரை கூட்டு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பாசிப் பருப்பு - அரை கப்
ஏதாவது ஒரு கீரை - ஒரு கட்டு
துருவிய தேங்காய் - ஒரு மூடி
பூண்டு - 5 பல்
எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - அரை தே.கரண்டி
உளுந்து - அரை தே.கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப் பருப்பை நன்றாக கழுவி கல் நீக்கிக் சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், 5 பூண்டு பல், சிறிதளவு எண்ணெய் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கீரையை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி ஒரு குக்கரில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பிரெஷர் போனதும் கீரையை எடுத்து வேகவைத்த பருப்புடன் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காயையும் போட்டு நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதற்கிடையில் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கிள்ளிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் நாவூரும் சுவையில் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் கீரை கூட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |