scene movie review : டார்க் காமெடியில் தெறிக்கவிட்ட ஜித்து மாதவன்... சூர்யாவின் 'சீன்' எப்படி இருக்கு?
scene movie review : தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சூர்யாவுக்கு இந்த ஆண்டு மற்றுமொரு கொண்டாட்டமாக அமைந்துள்ளது 'சீன்' திரைப்படம்.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்லென், நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் சைக்கோ திரில்லர், டார்க் காமெடி என வித்தியாசமான கலவையுடன் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
வித்தியாசமான கதைக்களம்த்தில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தில் தனக்கென சில விதிகளை வகுத்துக்கொண்டு செயல்படும் டிஎஸ்பி இன்பராஜாக சூர்யா நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்த பர்ஃப்யூம் கில்லரின் கொலை பாணியில் மீண்டும் கொலைகள் நடைபெறத் தொடங்குகின்றன. இதற்கிடையில் காவல்துறைப் பணியிலிருந்து விலக முடிவெடுக்கும் இன்பராஜுக்கு, ஈஸ்வரன் (நஸ்லென்) என்ற புதிய சைக்கோ கொலையாளி சவாலாக மாறுகிறார்.
தனது சொந்தப் பிரச்சினைகள், வித்தியாசமான குடும்பச் சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் நஸ்ரியாவின் உதவியுடன் ஈஸ்வரனை இன்பராஜ் எப்படிப் பிடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பில் அசத்தும் சூர்யா... மிரட்டும் நஸ்லென்!
இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா வழக்கம்போல தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அதிரடி, நகைச்சுவை, உணர்ச்சிகரமான தருணங்கள் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
குறிப்பாக இரண்டாம் பாதியில் நஸ்லெனுடன் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்த புத்திசாலித்தனமான சைக்கோவாக வரும் நஸ்லென், தனது அமைதியான நடிப்பாலும் மிரட்டலான பார்வையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சூர்யாவுக்கு இணையாக அவர் திரையில் ஸ்கோர் செய்வது படத்தின் மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
நஸ்ரியா ஆரம்பத்தில் சற்று மெதுவாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் தனது நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் அசத்துகிறார். சூர்யாவுடன் அவர் இணைந்து செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன.மறதி நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக ஆனந்த்ராஜ் உள்ளிட்ட துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜித்து மாதவனின் டார்க் காமெடி!
கொலை, காவல்துறை விசாரணை என்ற வழக்கமான கதையை தனது தனித்துவமான டார்க் காமெடி பாணியில் சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.
வித்தியாசமான கதாபாத்திரங்கள், எதிர்பாராத சம்பவங்கள், இயல்பான நகைச்சுவை எனப் படம் முழுவதும் அவரது இயக்க முத்திரை தெரிகிறது. முதல் பாதி சற்று மெதுவாகவும், சில இடங்களில் குழப்பமாகவும் நகர்கிறது.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு சூர்யா - நஸ்லென் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. டொவினோ தாமஸின் கேமியோவும் மற்றொரு சிறப்புத் தோற்றமும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கின்றன.

தொழில்நுட்பம்
ஒளிப்பதிவு படத்தின் இயல்பான காட்சியமைப்புக்கு வலுசேர்க்கிறது. சுஷின் ஷியாமின் பின்னணி இசை பரபரப்பான காட்சிகளுக்கு உயிரூட்டுவதுடன் படத்தின் முக்கியமான பலமாகவும் அமைகிறது.
குறைகளும் உண்டு! முதல் பாதியின் மெதுவான நகர்வு, சில லாஜிக் கேள்விகள் மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் கிரிஞ்ச் காட்சிகள் படத்தின் குறைகளாக உள்ளன. இருப்பினும் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பும் நடிகர்களின் நடிப்பும் அவற்றை ஓரளவு மறக்கச் செய்கின்றன.

மொத்தத்தில் சூர்யாவின் அசத்தலான நடிப்பு, நஸ்லெனின் மிரட்டலான வில்லத்தனம், நஸ்ரியாவின் கலகலப்பான பங்களிப்பு, ஜித்து மாதவனின் டார்க் காமெடி எனப் பல சிறப்பம்சங்களைக் 'சீன்' திரைப்படம் கொண்டுள்ளது.
சில குறைகள் இருந்தாலும், வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக அமையும். இந்தத் தீபாவளியில் சூர்யாவின் 'சீன்' ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |