‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் புகழ் நடிகை 83 வயதில் விபரீத முடிவு! பொலிஸார் விசாரணை
actress Metta Rungrat has passed away : எம்.ஜி.ஆர். நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலில் அவருடன் இணைந்து நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் (83), கடந்த 03ஆம் திகதி பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். நடித்து, தயாரித்து, இயக்கிய 1973ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. குறிப்பாக, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது.
இப்பாடலில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடனமாடியவர் தாய்லாந்தைச் சேர்ந்த நடிகை மேட்டா ரூங்ராத். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த நான்கு நடிகைகளில் ஒருவரான இவர், தனது அழகான நடிப்பு மற்றும் கொஞ்சும் தமிழ்ப் பேச்சால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
நடந்தது என்ன?
இந்நிலையில், 83 வயதான மேட்டா ரூங்ராத் கடந்த 03ஆம் திகதி தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் பணியாற்றிய 65 வயதான ஊழியர் வழங்கிய தகவலின்படி, மாலை 4 மணியளவில் வெளியே சென்றுவிட்டு 4.30 மணிக்குத் திரும்பியபோது அவர் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வேறு நபர்கள் நுழைந்ததற்கான அறிகுறிகளோ, பொருட்கள் கலைக்கப்பட்டதற்கான தடயங்களோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாராவடி கிட்சுவான் என்ற இயற்பெயரைக் கொண்ட மேட்டா ரூங்ராத், 1961ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். 1962ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கோல்டன் டால் விருதைப் பெற்ற இவர், தாய்லாந்தின் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியதுடன், திரையுலகினரால் ‘ஆசியாவின் கருப்பு முத்து’ என்றும் போற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |