தமிழில் அர்ச்சனை செய்து பணியை தொடங்கிய பெண்! இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.. டிரெண்டான ஓதுவார்
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.
இந்த நிலையில், தி.மு.க அரசின் 100-வது நாளான நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் ஐந்து தலித்துகள் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த பணி நியமன ஆணையில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் சுஹாஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சுஹாஞ்சனா தேனுபுரீஸ்வர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்து தனது ஓதுவார் பணியைத் தொடங்கினார். இவர் தமிழில் 'சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இது குறித்து சுஹாஞ்சனா கூறும்போது, "ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மனம் நிறைந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணியின் மூலமாக இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். எனக்கு ஓதுவார் பணி வழங்கி பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு மிக்க நன்றி.
என்னைப்போல் உள்ள பல பெண் ஓதுவார்களுக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.