தாயை தரதரவென இழுத்துச் சென்ற மகன்: காப்பாற்ற போராடும் வளர்ப்பு நாய்! கலங்க வைக்கும் புகைப்படம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி நல்லம்மாள்(65), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். சின்னசாமி கடந்த ஆண்டு இறந்து விட்டார்.
அவர் உயிரோடு இருந்த போது, சண்முகத்திற்கு 4.5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளார். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டதால், தனியாக வசிக்கும் நல்லம்மாள், 100 நாள் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் கூலியில் பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் தனது நகைகளை விற்று ரூ.3 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், நல்லம்மாள் வைத்துள்ள பணம் மற்றும் அவர் வசிக்கும் வீட்டை, தனக்கு எழுதித் தரவேண்டும் என்று கேட்டு, சண்முகம் அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று மதியம் நல்லம்மாள் வீட்டுக்கு சென்ற சண்முகம், அவரது மனைவி ஜானகி ஆகியோர், பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்துள்ளனர். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த சண்முகம், பெற்ற தாய் என்றும் பாராமல் நடுத்தெருவில் தரதரவென இழுத்து சென்று சரமாரியாக தாக்கியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
மகன் தாக்கிய போது மூதாட்டி நல்லம்மாள் வளர்த்து வந்த நாய் அவரை காப்பாற்ற முயற்சித்தது. கல்நெஞ்சம் கொண்ட மகன் பெற்ற தாயை தாக்கிய சூழலில் நாய் காப்பற்ற முயன்ற காட்சி நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
காயமடைந்த நல்லம்மாள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயை தாக்கிய சண்முகத்தை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு உடந்தையாக இருந்த மனைவியை பொலிசார் தேடி வருகின்றனர்.