குஜராத்தில் கால்நடை மேய்ப்பவர் மீது சிங்கம் நடத்திய அதிர்ச்சியூட்டும் தாக்குதல்! அவரே பகிர்ந்த அனுபவம்
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா தாலுகாவில் உள்ள கராஜியா கிராமத்தில், ஜூலை 6 காலை கால்நடை மேய்ப்பவரான கலுபாய் பர்மர் என்பவரை சிங்கம் தாக்கி காயப்படுத்தியுள்ள விடயம் மற்றும் இவர் சிங்கத்திடமிருந்து தப்பித்தது குறித்து பகிர்ந்த அனுபவம் என்பன இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பலத்த காயமடைந்த அவர், சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள பாவ்நகர் சர் தக்த்சின்ஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் சிங்கத் தாக்குதலாக பதிவான இரண்டாவது சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பு, ஜூன் 18 அன்று மஹுவா தாலுகாவின் கதடா கிராமத்தைச் சேர்ந்த நக்ஜிபாய் குஜாரியா உயிரிழந்தார். அவரும் சிங்கத் தாக்குதலில்தான் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் அனுபவம்
மருத்துவமனையில் இருந்து பேசிய கலுபாய், "காலை 8.30 மணியளவில் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது அங்கு இருந்த சிங்கம் என்னைத் தாக்கியது.
முதலில் தோளில் தாக்கி கீழே தள்ளியது. பின்னர் என் கையை வாயில் கவ்வியபடி சுமார் அரை மணி நேரம் வைத்திருந்தது. பிறகு அதைத் தடவியபோது அது கையை விட்டது; அதன்பின் நான் தப்பித்தேன்," என தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய ஷேத்ருஞ்சி வனவிலங்குத் துறையின் துணை வனப் பாதுகாவலர் சிராக் அமின், இளம் சிங்கம் தாக்கியதில் கலுபாய்க்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும், சிங்கம் அங்கிருந்து நகரும் முன் வனத்துறை குழுவால் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை என்று கலுபாய் கூறியுள்ளார்.
சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட காணொயில், கிராம மக்கள் சத்தமிட்டு சிங்கத்தை விரட்ட முயற்சிப்பதும், அதன் மீது கற்களை வீசுவதும் பதிவாகியுள்ளது.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் கார்ஜியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |