உக்ரைனுக்காக ரஷ்ய மக்கள் போராட்டம்! பதற்றத்தில் கண்ணீர் மல்க குழந்தையை அனுப்பி வைத்த தந்தை... LIVE
உலக நாடுகளின் எதிர்ப்பு, பொருளாதார தடை விதிப்புகளை புறந்தள்ளி, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் வகையில், அந் நாட்டுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன.
2 வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இன்று கீவ் நகரில் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவில் செயின்ட்பீட்டர் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை ஏதும் நடவாமல் தடுக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளளனர்.
உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து, ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருவதால், உக்ரைன் மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தலைநகர் கீவில் உள்ள பிரதான பகுதிகளில், அந்நாட்டு அரசு ஒலிபெருக்கிகள் வாயிலாக மக்களுக்கு வழிகாட்டுதல்களை அளித்து வருகிறது.
மறுபுறம், குண்டுகளின் சத்தம் தொடர்ந்து ஒலிக்கிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். உயிர் பிழைக்க, பதுங்கும் இடங்களை தேடி அலைந்து திரிகின்றனர். மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. ஏ.டி.எம்.,களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் இந்த திட்டமிடப்பட்ட போரினால், அதிக உயிர் சேதங்கள் ஏற்படும்; மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். கூட்டணி நாடுகளுடன் இணைந்து, சரியான வழியில் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தப் போரினால் ஏற்படும் அனைத்து சேதங்களுக்கும், ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டில், கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். தற்போது நடக்கும் போர் காரணமாக இவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்களை தொடர்பு கொண்டால், எந்தவித தகவலும் கிடைப்பது இல்லை என்றும், அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை என்றும், தமிழக மாணவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தங்களை மீட்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது உக்ரைன் நாட்டின் போரை ரஷ்ய நிறுத்துமாறு ரஷ்ய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பலர் பொலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக தனது போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையை கண்ணீர் மல்க பத்திரமாக அனுப்பி வைத்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.