புரதச்சத்து நிறைந்த ராஜ்மா பிரியாணி... எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக இருக்கும்.குறிப்பாக பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.
பிரியாணி அசைவமாக இருந்தால் தான் சுவையாக இருக்கும் என்று நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் வைச பிரியாணியை கூட அல்மேட் சுவையில் செய்து அசத்த முடியும்.
ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மாவை வைத்து மணமணக்கும் சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
ராஜ்மா - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
பெரும் சீரகம் - 1 தே.கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலைகள் - 2
தயிர் - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
புதினா இலைகள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் நன்றாக கழுவி குக்கரில் 10 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நெய் விட்டு அதில் பெருஞ்சீரகம், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி, கொத்தமல்லி புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வேக வைத்த ராஜ்மா மற்றும் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து விசில் வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ராஜ்மா பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |