1 கப் பச்சரிசி இருந்தாலே போதும்.. பால் பூரி ரெசிபி செய்யலாம்
மாலை வேளையில் வீட்டிலுள்ளவர்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள். ஒரே வகையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடும் பொழுது வீட்டிலுள்ளவர்களுக்கு சலிப்பாகி விடவும் வாய்ப்புள்ளது.
தினமும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசிப்பதை விட அது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்.
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வேண்டும் என்றால் அதற்கு ஒரு கப் அளவு பச்சரிசி இருந்தாலே போதும். அந்த பச்சரியைக் கொண்டு மிகவும் ருசியான பால் பூரி செய்யலாம்.
இது இட்லி, தோசைக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இதனை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், பால் பூரி எப்படி செய்வார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)
- உப்பு - 1/4 டீஸ்பூன்
- ரவை - 1/4 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- கெட்டி தேங்காய் பால் - தேவையான அளவு
- சர்க்கரை - சுவைக்கேற்ப
பூரி செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்து நீர் ஊற்றி 1-2 மணிநேரம் ஊற வைத்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு நாண்ஸ்டிக் வாணலியில் அரைத்த அரிசி மாவை ஊற்றி, அதில், உப்பு, ரவை இரண்டையும் போட்டு கிளறவும்.
அப்படி கிளறும் போது மாவானது கெட்டியாகத் தொடங்கும். மாவு திரண்டு வரத் தொடங்கும் பொழுது அடுப்பை அனைத்து விட்டு, மாவை குளிர வைக்கவும்.
கை வைக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளை நீரில் நனைத்து, மாவை நன்கு மென்மையாக பிசைந்து விடவும். சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் பூரி போன்று தேய்த்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பூரிகளை பொரித்து எடுத்த பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் பூரியை போட்டு, கெட்டியான தேங்காய் பாலை எடுத்து, அதில் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு ஊற வைக்கவும். இந்த முறையில் செய்தால் சுவையான பால் பூரி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
