பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது?
பொதுவாகவே இந்திய உணவுகளில் பூண்டுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. உண்மையில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும், பூண்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.
பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை கொண்டு செட்டிநாடு பாணியில் எவ்வாறு அசத்தல் சுவை கார குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப்பொருட்கள்
சின்ன வெங்காயம் - 15
பூண்டுப்பல் - 10
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க தேவையானவை
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
தனியா - 1 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
வெந்தயம் - கால் தே.கரண்டி
கச கசா - 1 தே.கரண்டி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தாளிக்க தேவையானவை
நல்லெண்ணை - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் புளியை 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்து ஆறவிட்டு, பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு , உளுத்தம் பருப்பைப் போட்டு தாளித்து, அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நறுக்கிய தக்காளி , உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்துக் கிளறிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானவுடன், இறக்கினால் அவ்வளவு தான் செட்டிநாடு பாணியில் ஆரோக்கியம் நிறைந்த பூண்டு காரகுழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
