காய்கறிகள் இல்லாமலே சப்பாத்திக்கு பூரிக்கு ஏற்ற வெங்காய தொக்கு செய்வது எப்படி?
சப்பாத்தி, பூரி அடிக்கடி செய்பவர்கள் அதற்கு சைடிஸ் என்ன செய்வது? என்கிற குழப்பத்தில் அடிக்கடி முழிப்பது உண்டு. அதற்கு ஏற்ப வெங்காய தொக்கு செய்து பார்த்தால் அதற்குப் பிறகு அடிக்கடி இதையே தான் நீங்கள் செய்வீர்கள்.
அந்த அளவிற்கு ருசி மிகுந்த மற்றும் அனைவருக்கும் விருப்பமான சைட் டிஷ் நாமும் வீட்டில் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள இங்கே பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
வெங்காயம் – 5
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவிற்கு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு
செய்முறை விளக்கம்
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள்.
அதன் பிறகு மெல்லியதாக நீள நீளமாக அறிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வரும் சமயத்தில் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கி வரும் சமயத்தில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு மூடி வைக்கவும். அப்போது தான் தக்காளி சீக்கிரமாக வேகும். தக்காளி வெந்து மசிய வந்ததும் அதில் தேவையான அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் தனி மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசம் போக வதக்கி ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லித்தழை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்க வேண்டும். உங்களிடம் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இது போல் சட்டென செய்யக்கூடிய வெங்காய தொக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கூடுதலாக இரண்டு சப்பாத்திகளை சாப்பிடுவார்கள்.
மேலும், வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து இப்படி செய்யும் தொக்கு சப்புக் கொட்டும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப வெங்காயத்தை கூட, குறைத்துக் கொள்ளலாம்.
இனி சப்பாத்தி, பூரிக்கு என்ன தொட்டுக் கொள்ள? என்று யோசிக்கவே தேவையில்லை. வெங்காயத்தை மட்டும் மெல்லியதாக நீளநீளமாக அறிந்து வைத்தால் போதும், சட்டென பத்தே நிமிடத்தில் செய்து விடலாம்.
சுட சுட சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக் கொண்டால் இதை விட பக்கா சைடிஷ் எதுவுமே இருக்க முடியாது என்று கூறலாம்.