மணமணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு
பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் சுவையில் கிராமத்து பாணியில் நெத்திலி கருவாட்டு குழம்பு செய்முறை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு- 200 கிராம்
கத்தரிக்காய்- கால் கிலோ
உருளைக்கிழங்கு- 2
பச்சை மிளகாய்- 2
தக்காளி- 2
புளி- 1 எலுமிச்சை அளவு
கடுகு- அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
அரைப்பதற்கு
சின்னவெங்காயம்- ஒரு கையளவு
மல்லித்தூள்- தேவையான அளவு
சீரகம்- அரை டீஸ்பூன்
மிளகு- ஒரு டீஸ்பூன்
வரமிளகாய்- 2
கருவேப்பிலை- சிறிதளவு
பூண்டு- 4
துருவிய தேங்காய்- கால் கப்
செய்முறை
கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும், இதனுடன் சின்ன வெங்காயம், மல்லித்தூள், சீரகம், மிளகு, பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
நன்கு வதங்கிய பின்னர் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து ஆற வைக்கவும். இக்கலவையுடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும், இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்க்கவும், தொடர்ந்து கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும் அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும், இதனுடன் புளிக்கரைசல் சேர்க்கவும்.
பச்சை வாசனை போன பின்னர், நெத்திலி கருவாட்டை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கருவாட்டுக் குழம்பு தயார்!!!