மொறுமொறுப்பான நெய் அப்பம்! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் செய்து ருசிக்கலாம் வாங்க
பலருக்கும் பிடித்த இனிப்புகளில் நெய் அப்பமும் ஒன்று.
தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடல் நலனுக்கு உகந்தது. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
இந்தகைய சக்தி கொண்ட நெய்யை சேர்த்து சுவையான நெய் அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 250 கிராம்
- தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
- ஏலக்காய் - 4
- சமையல் சோடா - ¼ தேக்கரண்டி
- வாழைப்பழம் - 1
- உப்பு - ¼ தேக்கரண்டி
- வெல்லம் - 200 கிராம்
- நெய் - தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பிறகு வாழைப்பழத்தின் தோலை நீக்கி நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
இறுதியாக குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.
பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுக்கவும். இப்போது நெய் அப்பம் தயார்.