நாவை கட்டிப்போடும் நண்டு மசாலா சாப்பிட்டதுண்டா...
பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான்.
ஆனால், அதன் சுவை அனைவரின் நாவையும் கட்டிப்போட்டு விடும்.
அந்த வகையில் தற்போது நண்டு மசாலா எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - Gomathi recepies
தேவையான பொருட்கள்
நண்டு - 1/2 கிலோ
தேங்காய் - கால் மூடி
வெள்ளைப் பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 25 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1
பிரிஞ்சி இலை - 1
மசாலா - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
image - Yummy tummy aarthi
செய்முறை
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் வெள்ளைப் பூண்டு, தேங்காய், மிளகு என்பவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுடன் மசாலா, உப்பு சேர்த்து பிசறி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து தாளித்து, பின்னர் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் அதில் பிசறி வைத்துள்ள நண்டையும் சேர்த்துக் கிளறவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
இறுதியாக ஓரங்களில் எண்ணெய் பிரிந்துவரும், அப்போது இறக்கினால் அருமையான நண்டு மசாலா ரெடி.
image - Geek Robocook