நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மட்டன் சூப்
பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று தான் சூப்.
சூப் என்பது வெறும் காய்கறிகளையும், கீரைகளையும் போட்டு செய்வது மட்டுமல்ல நமக்கு விருப்பமான இறைச்சி வகைகளையும் சேர்த்து செய்யலாம்.
இப்படி இறைச்சி வகைகள் சேர்க்கும் பொழுது சுவையும் அள்ளும், உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் அந்த சூப்பில் கிடைக்கும்.
காய்கறிகள், கீரைகள், இறைச்சிகள் அதனுடன் நீரை சேர்த்து சுவைக்காக ஒரு சில மசாலாக்களை போடும் போது அந்த நீர் சத்தான சூப்பாக மாறுகின்றது.
அந்த வகையில், சூப்புகளில் ஆட்டு இறைச்சியை கொண்டு செய்யப்படும் “ஆட்டு இறைச்சி சூப்“ மிகவும் பிரபலமானது. பழங்காலம் முதல் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஆட்டு இறைச்சி சூப் மருந்தாக பயன்படுகின்றது.
உதாரணமாக, நல்ல காரசாரமான ஆட்டு இறைச்சி சூப்பை குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் சரியாகி விடும், அத்துடன் எலும்பு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்களும் இந்த சூப்பை குடிக்கலாம்.
இது போன்று அடிக்கடி ஆட்டு இறைச்சி சூப்பை குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருந்தால் உடலில் எந்தவிதமான பிரச்சினையும் வராமல் தடுக்கலாம். வளர்ந்து வரும் மோசமான உணவுமுறையால் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
இந்த பிரச்சினையுள்ளவர்கள் ஆட்டு இறைச்சியை சூப் செய்து குடிக்கலாம். இந்த சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அடிக்கடி குடித்தால் இன்னும் நிறைய பலன்கள் கிடைக்கும்.
2. எலும்புகளை வலுவாக்கும்
ஆட்டு இறைச்சி சூப்பில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆட்டு இறைச்சியில் கால்சியம், தாமிரம், போரான், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இது எலும்புகளை வலுவாக்கி திடமான ஆரோக்கியம் தரும். வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் சரும ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகின்றன.
3. மினரல்கள் அதிகரிக்கும்
ஆட்டு இறைச்சி சூப்பில் உடலின் செயற்பாட்டிற்கு தேவையான தாதுக்கள் உள்ளன. அதாவது கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு அத்தியாவசிய தாதுக்கள் ஆட்டு இறைச்சியில் உள்ளன.
இது எலும்பு ஆரோக்கியத்திற்குதேவையான ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை வழங்குகின்றன.
4. இன்சோம்னியாவை குணப்படுத்தும்
சிலர் இரவில் போதியளவு தூக்கம் இல்லாமல் அவஸ்தைப்படுவார்கள். இந்த பிரச்சினை அதிகமான மன அழுத்தம் மற்றும் நோய்நிலைமை காரணமாக ஏற்படும்.
இந்த பிரச்சினையுள்ளவர்கள் ஆட்டு இறைச்சியில் செய்த சூப் செய்து குடிக்கலாம். ஆட்டு இறைச்சியில் உள்ள கிளைசின் என்ற அமினோ அமிலம் உடலில் உள்ள உணர்வு நரம்புகளை தளர்வடையச் செய்கிறது. இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
5. மூட்டு வீக்கம் குறையும்
மூட்டு வீக்கம் பிரச்சனையுள்ளவர்கள் குருத்தெலும்பு வளர்ச்சி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த குளுக்கோசமைன் மற்றும் காண்ட்ராய்டின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் தேவை.
இதனை நாம் ஆட்சி இறைச்சி சூப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சிலருக்கு வயதான பின்னர் இப்படியான பிரச்சினைகள் அடிக்கடி வரும்.
தேவையான பொருட்கள்
- ஆட்டு இறைச்சி - 250 கிராம்
- மிளகு - 2 மேசைக்கரண்டி
- தனியா - 2 மேசைக்கரண்டி
- வெங்காயம் - 2
- சீரகம் - 2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- தக்காளி - 2
- இஞ்சி - 2 அங்குல துண்டு
- பூண்டு பல் - 3
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு
சூப் செய்வது எப்படி?
- தனியா, மிளகு, சீரகம் ஆகிய மூன்றையும் போட்டு தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
- இதன் பின்னர் காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி , கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போன்ற பொருட்களை போட்டு ஒன்றாக அரைத்து வைக்கவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி போன்றவைகளை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் சூப்பிற்கு தேவையான ஆட்டு இறைச்சியை தாளிப்புடன் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இறைச்சியை நன்றாக வேக வைக்கவும்.
- இறைச்சி வெந்து கொண்டிருக்கும் போது அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களையும் உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
- இறைச்சி நன்றாக வெந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |