கோடை காலம் வந்துவிட்டதா? முலாம்பழத்தை சாப்பிட மறக்காதீங்க
கோடை காலம் என்றவுடனே சட்டென நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான், அதன் சுவைக்காகவே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனாலும் தர்பூசணி, முலாம் பழத்துக்கும் கிராக்கி வந்துவிடும், கோடை காலத்தில் வயிற்றை குளிரவைக்க முலாம்பழத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உண்பதற்கு ஏற்ற பழமாக இருக்கும் முலாம்பழத்தின் தாயகம் இந்தியாவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
முலாம்பழத்தின் சத்துக்கள்
- கார்போஹைட்டுகள்
- கரையும் நார்ச்சத்துக்கள்
- விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ்
- மெக்னீசியம், மேங்கனீஸ், ஜிங்க், கால்சியம்
- பொட்டாசியம்
- கரோட்டினாய்டுகள்
மருத்துவ நன்மைகள்
நீர்ச்சத்து - முலாம்பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால் கோடை காலங்களின் போது நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது, இதனால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் உடலை பாதுகாக்கிறது, அதேவேளை நமக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் - முலாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பட்டு கிருமிகளுடன் எதிர்த்து போராடும், நம் உடலின் வெள்ளை அணுக்களை வலுப்படுத்த தேவையான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி முலாம் பழத்தில் நிறைந்துள்ளது.
கண்களுக்கு நல்லது - முலாம்பழத்தில் உள்ள விட்டமின் ஏ, கண் பார்வையை சீராக்குகிறது, வயதாவதால் ஏற்படும் கண்புரை உட்பட கண் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, விட்டமின்கள் நிறைந்துள்ள உணவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் கண்புரை வருவது தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதயத்துக்கு நல்லது - முலாம்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தின் நலனை மேம்படுத்துகிறது, இதுமட்டுமன்றி இதயத்துக்கு தேவையான adenosine இருப்பதால் ரத்த நாளங்கள் சீராக இயங்க உதவிபுரிகிறது.
குடலின் ஆரோக்கியம் - நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராது, கோடை காலத்தின் போது அதிகம் உட்கொள்ளும் போது வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் தடுக்கப்படும், அதுமட்டுமல்லாமல் குடலின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது, வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வை தருவதால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
முடி மற்றும் தோலின் ஆரோக்கியம் - முலாம்பழத்தில் நிறைந்துள்ள விட்டமின் ஏ முடி நன்றாக வளர்வதற்கு தேவையான sebumயை அதிகளவு உருவாக்குவதால் முடியின் ஆரோக்கியம் மேம்படும், முலாம்பழத்தின் கூழை கொண்டு முடியை மசாஜ் செய்து வந்தாலும் நீளமான அடர்த்தியான முடியை பெறலாம். தொடர்ந்து முலாம்பழத்தை உட்கொண்டு வந்தால் இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் விட்டமின்களால் பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.