அசத்தல் சுவையில் மருத்துவ குணம் நிறைந்த புதினா சட்னி... எப்படி செய்வது?
எல்லா பருவகாலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன.
ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்துத்துவதில் சிறப்பாக செயற்படுகின்றது.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்களுக்கு புதினா அரும் மருந்தாகும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவை வைத்து அசத்தல் சுவையில் வீடே மணமணக்கும் வகையில் புதினா சட்னியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 6
புதினா - 1 கட்டு
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தக்காளி - 4 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
புளி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
சீரகம் - 1/4 தே.கரண்டி
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
பூண்டு - 15 பல்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, புதினா இலைகள் லேசாக சுருங்கும் வரையில் நன்றாக வதக்கி வரமிளயாயுடள் சேர்த்து குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் தக்காளி, புளி மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக வதக்கி எடுத்து குளிரவிட வேண்டும்.
அதன் பின்பு வறுத்த வரமிளகாய், பூண்டு, சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, அதனுடன் வதக்கிய தக்காளி, புதினா ஆகியவற்றையும் போட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் பூண்டு பற்களை நன்கு தட்டி அப்படியே தோலோடு போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள சட்னியையும் சேர்த்து நன்றாக கிளறி, எண்ணெய் பிரியத் தொடங்கும் போது இறக்கினால், இவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த அசத்தல் புதினா சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |