மாம்பழங்களை சாப்பிடும் முன்பு தண்ணீரில் ஏன் ஊற வைக்கனும் தெரியுமா?
மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன. இது உடலை குளிர்விக்கும் என்று நம்பப்படுகிறது...
கோடை காலம் வந்துவிட்டாலே நம் நினைவிற்கு வருவது மாம்பழங்கள் தான். தற்போது சந்தையில் எங்கு பார்த்தாலும் பழங்களின் அரசனான மாம்பழங்கள் தான் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாம்பழத்தின் சுவைக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால், மாம்பழத்தை சுவைக்காக மட்டுமே சாப்பிட்டால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடையில் மாம்பழத்தை ஏன் சாப்பிட வேண்டும்.?: பொதுவாக கோடை காலத்தில் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. மாம்பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது, கோடை வெயிலில் இருந்து நம்மை காப்பது மட்டுமின்றி உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் வழங்குகிறது.

இதனால் உடலில் நீர்ச்சத்து குறைவது தடுக்கப்படுகிறது. மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன. இது உடலை குளிர்விக்கும் என்று நம்பப்படுகிறது.
டாக்டர் ரித்தி பாண்டேயின் கூற்றுப்படி, எந்தவொரு பொருளையும் அளவோடு உண்டால் அது ஆரோக்கியமானதே. மாம்பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றாலும் அதை அதிகமாக உட்கொண்டால் அது உடலின் சூட்டை அதிகரிக்கிறது.
குறிப்பாக, அதிகப்படியான மாம்பழம் சாப்பிடுவது உடல் வெப்பநிலையை அதிகரித்து முகம் மற்றும் உடலில் முகப்பருக்களையும் கொப்புளங்களையும் ஏற்படுத்தும். அதிகமாக உட்கொண்டால் அது செரிமான அமைப்பைப் பாதித்து வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றில் வாயு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் கிடைத்த அளவுக்கு பழங்களை சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பல குழந்தைகள் மாம்பழத்தை தோலுடன் கடித்து சாப்பிடுவார்கள். இது நல்லதல்ல.

மாம்பழத்தோலில் இருக்கும் சில ரசாயனங்கள் அல்லது சுரப்பு தோலில் பட்டால் சொறி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பழங்களை நன்றாகக் கழுவி தோலை உரித்து, துண்டுகளாக நறுக்கிக் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. குழந்தைகளின் உடல் மிகவும் உணர்திறன் கொண்டது. எனவே, அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பழங்களைக் கொடுக்காமல் இருப்பது முக்கியம்.
மாம்பழம் ஆற்றலைத் தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்குப் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. இருப்பினும், இந்தப் பழம் நமக்கு ஒரு 'சாபமாக' இல்லாமல் 'வரமாக' அமைய வேண்டும் என்கிறார் டாக்டர் பாண்டே. மாம்பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பது அவற்றின் காரத்தைக் குறைக்கும்.
மாம்பழங்களை சரியான முறையிலும் அளவோடும் உண்டால், அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், அதன் சுவைக்காக அதிகமாகச் சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் உடல்நலக்குறைவு ஏற்படும். எனவே, இந்தக் கோடையில் மாம்பழங்களைச் சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |