தாறுமாறான சுவையுடன் மாங்காய் ரசம்! சுலபமாக செய்வது எப்படி?
மாங்காயில் குழம்பு, சட்னி,தொக்கு போன்றவற்றை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், மாங்காயில் ரசம் வைத்து குடித்தீர்களா? என்று கேட்டால், பலரும் மாங்காயில் ரசமா? என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள்.
ஆம், பொதுவாகவே ரசம் என்பது உடல் நிலை சரியில்லாத சந்தர்ப்பங்களில் வைத்து குடிப்பதுண்டு. அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம் போன்றவை சேர்ந்திருப்பதால் உடலுக்கும் நன்மையளிக்கும் நாவுக்கும் சுவையாக இருக்கும்.
அதிலும் மாங்காய் ரசம் என்றால் கூடுதல் சிறப்பாக இருக்கும். இந்த குறிப்பில் வித்தியாசமான மாங்காய் ரசம எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1 (நறுக்கி, வேக வைத்தது)
மிளகு - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
வெல்லம் - 1 துண்டு
தேங்காய் - 1 கப் (துருவியது)
வரமிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தண்ணீர் - 1 லீட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வேகவைத்த மாங்காயில் இருந்து சாற்றினை எடுத்து வடிகட்டி, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் சீரகம், மிளகு என்பவற்றை சேர்த்து வறுத்து, குளிர்ந்ததும் பொடி செய்துகொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, துருவிய தேங்காய், வரமிளகாய் சேர்த்து வதக்கி, பின்னர் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் மாங்காய் நீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், பவுடர், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதிக்க விடவேண்டும்.
இறுதியாக தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சுவையான மாங்காய் ரசம் தயார்.