செங்காந்தள் பூ கிழங்கை சாப்பிட்ட இளைஞர் மரணம்! மருத்துவர்கள் சொல்வது என்ன?
தமிழகத்தில் சமூகவலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம்.
எதற்கெடுத்தாலும் இணையதளங்களின் உதவியை நாடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது.
இது ஒருசில நேரங்களில் ஆபத்தாய் முடிந்துவிடலாம், அதற்கான உதாரணம் தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.
அதாவது, சமூகவலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்டு இளைஞர் மரணமடைந்துள்ளார்.
நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டத்தின் மின்னுர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 25), அங்குள்ள கல்குவாரியில் பணியாற்றி வருகிறார்.
அடிக்கடி சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வந்த லோகநாதன், செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்டால் நல்லது என பார்த்துள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய நண்பரான ரெத்தினம் என்பவருடன் சேர்ந்து கிழங்கை சாப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மணிநேரங்களில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மரணம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
என்ன காரணம்?
ஆயுர்வேதம், சித்தா, யுனானி என மருத்துவதுறைகள் பலவற்றிலும் செங்காந்தள் பூச்செடியின் கிழங்கு பயன்படுத்தப்படுகிறது, காரணம் இதில் உள்ள கோல்ச்சிசின் (COLCICHINE ) என்னும் மூலப்பொருள்.
கீல்வாதம், மூட்டுவலி போன்றவற்றை சரிசெய்ய இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் ஆபத்தானது என்னவென்றால், கோல்ச்சிசினின் அளவை எக்காரணம் கொண்டும் அதிகளவில் எடுத்துக்கொண்டால் மரணத்தை தழுவ நேரிடும்.
ஒருவர் மரணமடைய அவருக்கு 7 முதல் 26 மில்லிகிராம் கோல்ச்சிசினே போதுமானது, ஒரு கிழங்கில் சுமார் 350 மில்லிகிராம் வரை கோல்ச்சிசின் இருக்கலாம்.
அதாவது, உயிர் போகும் அளவுக்கு குறித்த இளைஞர் கிழங்கை சாப்பிட்டதே காரணம் என தெரியவந்துள்ளது.