ஈரமான தலையுடன் தூங்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த பாதிப்புகள் குறித்து ஜாக்கிரதை!
Why You Should Avoid Going to Bed with Wet Hair : தலைமுடியைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். ஆனால், தலைக்குக் குளித்த பிறகோ அல்லது மழையில் நனைந்த பிறகோ தலைமுடியைச் சரியாக உலர்த்தாமல் ஈரத்துடனேயே தூங்குவது பலரும் செய்யும் தவறுகளில் ஒன்றாகும்.
ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, தலைமுடி உடைதல், உச்சந்தலையில் அரிப்பு, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கு வித்திடுவதுடன் இது சரும ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
அந்தவகையில், ஈரமான தலையுடன் தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்படக்கூடிய கூந்தல் மற்றும் சரும பிரச்சினைகள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம்.

முக்கிய பாதிப்புகள்
முடி உடைதல் அதிகரிக்கும்
தலைமுடி ஈரமாக இருக்கும்போது அதன் வலிமை குறைந்து எளிதில் உடையக்கூடியதாக மாறுகிறது. இந்நிலையில் தூங்கும்போது தலையணை உறையுடன் ஏற்படும் உராய்வு காரணமாக முடி உடைதல் அதிகரிக்கலாம். குறிப்பாக, நீளமான மற்றும் வறண்ட தலைமுடி கொண்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தலைமுடி சீரற்றதாக மாறும்
ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது, தூக்கத்தில் புரண்டு படுப்பதால் முடி பல்வேறு திசைகளில் வளைந்து சிக்கலாகலாம். பின்னர் தலைமுடி காயும்போது கலைந்த மற்றும் ஒழுங்கற்ற தோற்றத்தைப் பெறும்.இதனால் காலையில் தலைமுடியைச் சீரமைப்பது சிரமமாகலாம்.
உச்சந்தலையில் பூஞ்சை வளர்ச்சி
ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் தலையணை உறையும் ஈரமாகிவிடலாம். தொடர்ந்து ஈரப்பதம் நீடித்து, தலையணை உறை முறையாகச் சுத்தம் செய்யப்படாவிட்டால் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாகும். இதனால் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொடுகுத் தொல்லை
அதிகரிக்கலாம் உச்சந்தலையில் நீண்ட நேரம் ஈரப்பதம் நீடிப்பது ஏற்கெனவே பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, உச்சந்தலையில் எண்ணெய்ப்பசை மற்றும் பூஞ்சையின் செயல்பாடு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அரிப்பு மற்றும் பொடுகு அதிகமாகத் தெரியலாம்.
முகப்பரு ஏற்பட வாய்ப்பு
தலைமுடியில் உள்ள எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகள் தலையணை உறையில் படியலாம். தலையணை உறையை அடிக்கடி மாற்றாமல் பயன்படுத்தும்போது அதில் சேரும் அழுக்கு மற்றும் நுண்ணுயிரிகள் முகத்தின் சருமத்தைப் பாதிக்கக்கூடும். இதனால் சிலருக்கு முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.

சளி மற்றும் தொண்டை வலி
குளிர்சாதன வசதி கொண்ட அறையில் ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது தலையில் அதிகக் குளிர்ச்சியை உணரலாம். இதனால் சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். இருப்பினும், ஈரமான தலைமுடியுடன் தூங்குவது நேரடியாகச் சளி அல்லது தொண்டை வலிக்கு காரணமாக போதும் சில வழிகளில் இதுவும் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
முக்கிய குறிப்பு
தலைக்குக் குளித்த பிறகு தலைமுடியை மென்மையான துணியால் அழுத்தித் துடைத்து, அதிகப்படியான நீரை அகற்ற வேண்டும். தலைமுடியின் வேர்ப்பகுதி மற்றும் உச்சந்தலை நன்றாக உலர்ந்த பின்னரே தூங்கச் செல்ல வேண்டும். மேலும், தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

முடிவுரை தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் பின்பற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, தலைக்குக் குளித்த பிறகு தலைமுடியை உலர்த்தாமல் ஈரத்துடனேயே தூங்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க துணைப்புரிவதுடன் மறைமுகமாக நோய் நோற்றில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |