கடைசி வரை நிறைவேறாத ரோபோ சங்கரின் ஆசை! வேதனையுடன் பகிர்ந்த மதுரை முத்து
தனது நகைச்சுவை பேச்சால் பலரையும் சிரிக்க வைத்த ரோபோ சங்கரின் மறைவு திரைத்துறையிரையும், தமிழ் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் அவரின் இறப்புக்கு திரையுலக பிரபலங்கள் சின்னத்திரை பரபலங்கள் என பலர் நேரில் சென்றும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறவே இல்லை என மதுரை முத்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மதுரை முத்து இரங்கல்
மதுரை முத்து குறிப்பிடுகையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரோபோ சங்கர், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.
அது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது திடீரென அவரின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
கடந்த வாரம் கூட ஒரு நிகழ்ச்சியில் மனைவியுடன் அழகாக நடனம் ஆடியிருந்தார். அதுவே கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தவே கூடாது.
அது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால், குடிப்பதில் இருந்து முற்றிலுமாக மாறி இருந்த ரோபோ சங்கரை இறைவன் அழைத்துக் கொண்டார். அவரது இறப்பு எனக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
சக கலைஞனாக அவருடன் நான், இருபது வருடம் பயணித்து இருக்கிறேன். வெறும் 1500 ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் பயணம் செய்தோம். அவருடைய நினைவு எக்கச்சக்கமாக என்னுடைய மனதில் பதிந்து இருக்கிறது.
ரோபோ சங்கர் ஒரு அசாத்தியமான கலைஞன். மிமிக்ரி அசுரன் என்று சொல்லலாம். மிமிக்ரி மட்டுமில்லாமல், சவுண்டு எபெக்ட், அதாவது நான்கு இசை கருவிகளில் இருந்து வரும் இசையை அவர் ஒருவரே இசைத்து காட்டுவார்.
அப்படி திறமையான கலைஞர் நம்மை விட்டு போனது தான் வேதனையாக இருக்கிறது. பேரனுக்கு காதுகுத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். கடைசியில் இப்படி ஆகிவிட்டது? அவருடைய இழப்பை நாம் ஒரே வார்த்தையால் சொல்லிவிடுவோம். ஆனால், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்குத் தான் அந்த வேதனையும் வலியும் தெரியும்.
ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை
ரோபோ சங்கர் கமலஹாசனின் தீவிர ரசிகர் அவருடைய படத்தில் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது.
ரோபோ சங்கருக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்போது, அவர் கமலஹாசன் அவரின் போஸ்டரை ஓட்டுவார்.
விஸ்வரூபம் படம் வெளியான போது, படம் வெற்றிபெற கையில் சூடத்தை ஏற்றி வழிபாடு நடத்தினார். அப்படி ரோபோ சங்கர் கமல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
அவருக்கு கமலின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போனது.
ரோபோ சங்கரின் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மதுரை முத்து கண்கலங்கியபடியே பேசினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |