ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ!
பிரபல நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர். மாதவனுக்கு நடிப்பின் மீது மட்டுமல்ல, தோட்டக்கலை மற்றும் இயற்கை விவசாயத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
2017ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், இயற்கை விவசாயத்தின் மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணங்களை மாதவன் பகிர்ந்திருந்தார்.

பால்கனியில் விவசாயமா?
நவீன முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் ஊட்டச்சத்து குறித்த கவலையும், மரபணு மாற்றத்தின் அதிகரிப்பும் தன்னை இயற்கை விவசாயத்தை நோக்கி ஈர்த்ததாக அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து ஆய்வுகள் மற்றும் வாசிப்புகள் மூலம் கற்றுக்கொண்டவற்றை நடைமுறையில் பயன்படுத்திய மாதவன், மும்பையில் உள்ள தனது வீட்டின் பால்கனியையே இயற்கை முறையிலான தோட்டமாக மாற்றியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த மாடித்தோட்டம் தனது குடும்பத்தின் பருவகால காய்கறித் தேவையில் சுமார் 70 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. பல ஆண்டுகளாக வெண்டைக்காய், கத்திரிக்காய், ப்ரோக்கோலி, தக்காளி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளையும் அவர் வளர்த்து வருகிறார்.
இயற்கைத் தோட்டம் அமைக்க என்ன தேவை?
அந்தவகையில், தோட்டக்கலை நிபுணரும் Bonsai and Gardening Zone நிறுவனருமான ஷிரீஷ் சர்மாவின் கூற்றுப்படி, இயற்கை மாடித்தோட்டம் என்பது ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மட்டுமே அல்ல. குறைந்த இடத்திலும் ஆரோக்கியமான ஓர் உயிர்ச்சூழலை உருவாக்கி, அதை தொடர்ந்து பராமரிப்பதே இதன் நோக்கம்.

இதற்கு ஆரோக்கியமான மண், முறையான நீர்ப்பாசனம், பருவத்திற்கேற்ற விதைப்பு மற்றும் இயற்கையான பூச்சி மேலாண்மை ஆகியவை முக்கியமானவை. இந்த அம்சங்களில் ஏதேனும் ஒன்று புறக்கணிக்கப்பட்டால், செடிகள் பாதிக்கப்படுவதுடன் விளைச்சலும் குறையலாம்.
குறிப்பாக ஆரம்பநிலையில் தோட்டம் அமைப்பவர்களுக்கு இது தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரிக்கிறார்.

மாடித்தோட்டம் அமைக்க 5 எளிய வழிகள்
1. முதலில் நீர்க்கசிவைத் தடுக்க வேண்டும் மாடி அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்கும் முன், நீர்க்கசிவு ஏற்படாத வகையில் முறையான waterproofing செய்வது அவசியம்.
2. ஆரோக்கியமான மண்ணைத் தயாரிக்க வேண்டும் தோட்டத்தின் வெற்றிக்கு மண்ணே அடிப்படை. கனமான தோட்ட மண்ணை மட்டும் தொட்டிகளில் பயன்படுத்தாமல், தண்ணீர் எளிதாக வெளியேறும் வகையில் வளமான நடவு ஊடகத்தைத் தயாரிக்க வேண்டும்.
இதில் தரமான கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம், கொக்கோபீட், வேப்பங்கொட்டைத் தூள், மண் மற்றும் உயிரியல் பூஞ்சைக் கட்டுப்பாட்டுக்கான டிரைக்கோடெர்மா போன்றவற்றை சரியான அளவில் பயன்படுத்தலாம்.
3. அதிகப்படியான தண்ணீரைத் தவிர்க்க வேண்டும் செடிகள் பாதிக்கப்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று அதிகப்படியான நீர்ப்பாசனம். ஒவ்வொரு தொட்டியிலும் போதுமான வடிகால் துளைகள் இருக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் ஊற்றுவதற்குப் பதிலாக, மண்ணின் மேற்பரப்புக்குக் கீழே ஈரப்பதம் உள்ளதா என்பதைப் பார்த்து தண்ணீர் ஊற்றுவது சிறந்தது.
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக வேர் அழுகல் மற்றும் பூஞ்சை நோய்கள் ஏற்படலாம். எனவே, அந்த காலத்தில் நீர்ப்பாசனத்தைக் குறைப்பது அவசியம்.
4. பூச்சிகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும் வரை காத்திருக்காமல், செடிகளின் இலைகளின் அடிப்பகுதி மற்றும் புதிய தளிர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அஃபிட்ஸ், மாவுப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் மற்றும் கம்பளிப்பூச்சிகள் போன்ற பூச்சிகள் தென்பட்டால் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றுவதுடன், வேப்ப எண்ணெய் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் இயற்கை பூச்சி மேலாண்மை முறைகளையும் முறையாகப் பயன்படுத்தலாம்.
5. ஆரம்பத்தில் எளிதாக வளரக்கூடிய காய்கறிகளைத் தேர்வு செய்ய வேண்டும் தோட்டக்கலையில் புதிதாக ஈடுபடுபவர்கள் ஒரே நேரத்தில் அதிக வகையான செடிகளை வளர்க்க முயற்சிக்காமல், எளிதில் வளரக்கூடிய காய்கறிகளுடன் தொடங்குவது நல்லது.
கத்திரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ் மற்றும் கொத்தமல்லி போன்றவை ஆரம்பநிலையினருக்கு ஏற்ற தேர்வுகளாகக் கூறப்படுகின்றன. “இயற்கையுடன் இணைந்து செயல்படுவதுதான் வெற்றிகரமான இயற்கைத் தோட்டத்தின் அடையாளம்” என் ஷிரீஷ் சர்மா குறிப்பிடுகின்றார்.
ஆண்டு முழுவதும் அனைத்து வகையான காய்கறிகளையும் வளர்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, தங்களது உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற பருவகால காய்கறிகள் மற்றும் மூலிகைகளுடன் தொடங்குவதே சிறந்தது என்பதும் அவரது கருத்து.
மாதவன் போல வீட்டின் பால்கனி அல்லது மாடியிலேயே சிறிய இயற்கைத் தோட்டத்தை உருவாக்குவதன் மூலம், வீட்டிற்குத் தேவையான சில காய்கறிகளை நாமே விளைவிப்பதுடன், நகர வாழ்க்கையிலும் கூட இயற்கையுடன் நெருக்கமாக இருக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |