நுரையீரல் புற்றுநோயின் அபாயகரமான எச்சரிக்கை அறிகுறிகள் - அலட்சியம் வேண்டாம்...உடனே மருத்துவரை நாடுங்கள்!
உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு இன்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஆனாலும், நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது.
ஆபத்தான உயிர் கொல்லியாக நுரையீரல் புற்றுநோய் உருவெடுத்து வரும் நிலையில் நமக்கு ஆறுதல் அடையக்கூடிய விஷயம் ஒன்று இருக்கிறது.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள்
புகைப்பிடிப்பது - புகைப்பிடிப்பதால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல் தான். புகைப்பிடிப்பதால் நுரையீரல் அதன் ஆரோக்கியத்தை முற்றிலும் இழந்து, பல்வேறு நோய்கள் நுரையீரலைத் தாக்குகின்றன.
நச்சுக்களின் வெளிப்பாடு - புகைப்பிடிப்பதால் மட்டும் தான் நுரையீரல் புற்றுநோய் வரும் என்று நினைக்கக்கூடாது. இது தவிர, ஆர்சனிக், யுரேனியம், அஸ்பெஸ்டாஸ் அல்லது ரேடான் போன்ற கன உலோகங்களின் வெளிப்பாட்டினாலும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்.
குடும்ப வரலாறு - மற்ற வகை புற்றுநோயைப் போலவே, நுரையீரல் புற்றுநோயும் பரம்பரை வாயிலாகவும் வரக்கூடும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகமாக புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடும் போது, மரபணு மாற்றத்துடன் கூடிய நவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
மாசடைந்த சுற்றுச்சூழல் - காற்று மாசுபாட்டினாலும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய புற்றுநோய்கள் வரக்கூடும்.
நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றி மாசடைந்த காற்று இருந்தால், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இமனால் நுரையீரலில் நச்சுக்கள் நுழைவதைத் தடுக்கலாம்.
நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது. ஆனால் படிப்படியாக அறிகுறிகளானது வெளிப்பட ஆரம்பிக்கும்.
நாள்பட்ட இருமல்
நீங்கள் பல மாதங்களாக இருமலால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதை சாதாரணமாக நினைத்து விடாமல் உடனே மருத்துவரின் உதவியை பெற்று கொள்ளுங்கள்.
சுவாசிப்பதில் சிரமம்
மூச்சுத் திணறல் அல்லது மார்பு நெரிசல் போன்றவை நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாகும். ஆகவே இத்மாதிரியான உணர்வை நீங்கள் அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சளியில் இரத்தம்
நுரையீரல் புற்றுநோய் உள்ள நோயாளி நாள்பட்ட இருமல் காரணமாக சுவாச பாதையில் கீறல்கள் ஏற்பட வழிவகுத்து, இதன் விளைவாக இருமலின் போது இரத்தத்தை வரவழைக்கிறது.
மார்பு பகுதியில் வலி
நுரையீரல் புற்றுநோய் மார்பு, தோள்பட்டை அல்லது முதுகுப் பகுதியில் வலியை உண்டாக்கலாம். அதுவும் உங்களது மார்பு வலி கூர்மையாகவோ, லேசாகவோ, தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ வந்தால், உங்கள் மருத்துவரிடம் உடனே தெரிவியுங்கள்.
நுரையீரல் புற்றுநோயினால் வரும் மார்பு வலி மற்றும் அசௌகரியத்திற்கு மார்பு சுவற்றில் உள்ள வீக்கமடைந்த நிணநீர் முடிச்சுக்களில் உள்ள வீக்கத்தினால் தான் ஏற்படுகிறது.
தடித்த, கரகரப்பான குரல்
கரகரப்பான குரல் சாதாரண சளியால் கூட ஏற்படலாம். ஆனால் இந்த கரகரப்பு 2 வாரத்திற்கும் அதிகமாக நீடித்திருந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல் உடனே மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்ளுங்கள்.
தலைவலி
புற்றுநோய் செல்களானது மூளை வரை பரவி இருப்பது தான் தலைவலிக்கு காரணம். இருப்பினும், அனைத்து வகையான தலைவலிக்கும் நுரையீரல் புற்றுநோய் தான் காரணம் என்பதில்லை.
சில சமயங்களில் நுரையீரலில் உள்ள கட்டிகளானது, முன்புற பெருநாளத்தில் அழுத்தத்தைக் கொடுக்கிறது.
இந்த பெரிய நாளம் தான் உடலின் மேல் பாகங்களில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை ஓடச் செய்கிறது. இந்த நாளத்தில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால், அது தலைவலியைத் தூண்டுகிறது.
பிற அறிகுறிகள்
- விவரிக்க முடியாத முதுகு வலி
- திடீர் மனச்சோர்வு
- தீவிரமான மனநிலை மாற்றங்கள்
- எடை இழப்பு மற்று களைப்பு போன்ற அறிகுறிகளைப் பார்க்கும் போது உஷாராகிக் கொள்ளுங்கள்.
அதிக ஆபத்தில் உள்ள மக்கள்
- புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் புகைப்பிடித்துக் கொண்டிருப்பவர்கள்.
- 55 முதல் 80 வயதிற்கு இடைப்பட்ட மக்கள்.
முக்கிய குறிப்பு
மார்பக எக்ஸ்-ரே கொண்டு ஆரம்ப கால நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய முடியாது.
இருப்பினும், 2011 இல் வெளிவந்த ஆய்வில், குறைந்த டோஸ் சிடி-ஸ்கேன் மூலம் 20 சதவீதம் நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் இறப்புக்களைக் குறைக்க முடிவதாக தெரிய வந்துள்ளது.
எனவே உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது போன்ற உணர்வு இருந்தால், குறைந்த டோஸ் சிடி-ஸ்கேன் செய்து பாருங்கள்.
கட்டாயம் இந்த ஆபத்தான அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் மருத்துவரை சந்தித்து சிகிச்கைகளை பெற்று கொள்ளுங்கள்.