சி.டி ஸ்கேன் வேண்டாம்! இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா? மருத்துவர்களின் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் கண்டறிய பயன்படும் சி.டி ஸ்கேனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தொற்றின் வீரியம் நாளுக்குநாள் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது.
இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனாவுக்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று உறுதியாகிவிட்டால், ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்றவை எடுக்கப்படுகிறது.
ஆனால், ஆர்டிபிசிஆர் சோதனையில் குழப்பமான முடிவு ஏற்படும்பட்சத்தில் சிடி ஸ்கேனை செய்ய மருத்துவமனைகள் பரிந்துரைத்து வருகின்றன.
ஆனாலும், பொதுமக்களில் சிலர் சிடி ஸ்கேன் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே, தேவையில்லாமல் சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் சிடி ஸ்கேன் செய்தும், சிலருக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அவசியம் இல்லாமல் போகிறது என்று தெரிவித்துள்ள அவர், சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.