உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி! செய்வது எப்படி?
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு என நம் தாத்தா, பாட்டி பலமுறை சொல்லக்கேட்டிருப்போம், வெறுமனே கொழுப்பை கரைப்பது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தை கொண்டது கொள்ளு.
ஏராளமான வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து என பல சத்துக்களை கொண்டுள்ள கொள்ளை ரசம், துவையல், பொடி என பல வகைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவில் கொள்ளு இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு- 1 கப்
இட்லி அரிசி- 1 கப்
அவல்- 1 கப்
உளுந்து- 1 கப்
வெந்தயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் கொள்ளுவை நன்றாக அலசிவிட்டு சுமார் 4 முதல் 5 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
உளுந்துடன், சிறிது வெந்தயம் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அவுலை நன்றாக அலசிவிட்டு அரைமணிநேரம் ஊறவைத்தால் போதுமானது.
அடுத்ததாக உளுந்தை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும், 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைத்தால் பொங்கி வரும்.
இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும், பின்னர் அரிசி, கொள்ளு மற்றும் அவுலை அரைத்துக்கொள்ளவும்.
இதனை உளுந்து மாவுடன் சேர்த்து கலக்கி சிறிது உப்பு சேர்க்கவும். 8 மணிநேரம் வரை இதை அப்படியே வைத்து விட்டால் புளித்துவிடும்.
தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்தால் கமகமக்கும் வாசனையுடன் கொள்ளு இட்லி தயாராகிவிடும்!!!