காஷ்மீரி பாணியில் காரசாரமான சில்லி சிக்கன்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பெற்றுவிடும். பல்வேறு முறைகளிலும் சமைக்க கூடிய ஒரு உணவாக இருப்பதே சிக்கனின் சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், காஷ்மீரி பாணியில் காரசாரமான சில்லி சிக்கன் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
புதினா - ஒரு கைப்பிடியளவு
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 4
வறுத்து பொடி செய்வதற்கு
மிளகு - 1/2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/4 மேசைக்கரண்டி
சீரகம் - 1/4 மேசைக்கரண்டி
மல்லி - 1/4 மேசைக்கரண்டி
பட்டை - 4 துண்டு
தாளிப்பதற்கு தேவையானவை
வெண்ணெய் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
உப்பு - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 மேசைக்கரண்டி
தயிர் - 50 மிலி
கருப்பு மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
பிரஷ் க்ரீம் - 100 மிலி
பச்சை மிளகாய் - 3
ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்சர் ஜாரில் புதினா, மல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு, சீரகம், மல்லி மற்றும் பட்டையை சேர்த்து நல்ல மணம் வரும் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து அதனையும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கழுவி வைத்துள்ள எலும்பில்லாத சிக்கனை சேர்த்து, தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா மல்லி விழுதையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அத்துடன் தயிரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் வைத்து, சிக்கனை 10-15 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, பின் அதில் கருப்பு மிளகுத் தூள், வெள்ளை மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
அதனையடுத்து அதில், பிரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், 1/2 கைப்பிடி ஸ்பிரிங் ஆனியன் மற்றும் சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை தூவி கிளறி உடனே இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் காஷ்மீரி சில்லி சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |