கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை
Karthigai Deepam Recipe: கார்த்திகை தீப திருநாளான இன்று ஸ்பெஷலான பனை ஓலை கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படும் நிலையில், வீடுகளில் விளக்குகளை ஏற்றி ஒளிரவிடுவது மட்டுமின்றி பலகாரங்களையும் செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கமாகும்.
இந்த திருநாளில் கொழுக்கட்டை, பொரி உருண்டை, அப்பம் போன்ற இனிப்புகள் பல வீடுகளில் தயாரிக்கப்படுகின்றது. இந்நிலையில் பாரம்பரிய இனிப்பான பனை ஓலை கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
கருப்பு எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/4 கப்
ஏலக்காய் - 5
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
பொடித்த கருப்பட்டி - 1/4 கிலோ
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் அரிசிமாவை சேர்த்து 3 நிமிடம் வறுத்து தட்டில் சேர்த்து குளிர வைக்கவும்.
பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து துருவிய தேங்காய், பாசிப்பருப்பு, கருப்பு எள்ளு இவற்றினை தனித்தனியாக வறுத்து மாவுடன் சேர்த்து குளிர வைக்கவும்.
மிக்ஸி ஜார் ஒன்றில் பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் இவற்றினை அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும். இதனுடன் சுக்கு பொடியை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
பாத்திரம் ஒன்றில் பொடித்த கருப்பட்டியை போட்டு தண்ணீர் சேர்த்து, கருப்பட்டி கரைந்ததும், அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது மாவின் மீது கொஞ்சம் கொஞ்சமாக கருப்பட்டி தண்ணீரை சேர்த்து கரண்டியால் கிளறிவிடவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையால் மாவை பிசைந்து, பனை ஓலைக்கு இடையில் வைத்து சிறிய நூல் கொண்டு கட்டிவிடவும்.
இவ்வாறு அனைத்து மாவையும் இவ்வாறு பனை ஓலைகளில் வைத்து தயார் செய்து கொண்டு, இட்லி பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், இட்லி தட்டில் இந்த ஓலை கொழுக்கட்டையை வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் பனை ஓலை கொழுக்கட்டை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |