இட்லி, தோசைக்கு செம்ம காம்போ: கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னி! பண்ணலாமா?
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவிற்கு இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகள் அடிக்கடி செய்யப்படுவது வழக்கம்.
இவற்றின் சுவையை இன்னும் அதிகரிப்பதில் சட்னிகளின் பங்கு இன்றியமையாதது என்றால் மிகையாகாது. ஆனால் தினமும் தேங்காய் சட்னி, காரச் சட்னி, தக்காளி சட்னி என்று ஒரே மாதிரியான சுவைகளைச் செய்து சலித்துவிட்டதா?

குடும்பத்தினரையும் விருந்தினர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அசத்தலான சுவையில் கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 1
வர மிளகாய் – 4
கடலைப்பருப்பு – 2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
கொத்தமல்லி இலை (நறுக்கியது) – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தே.கரண்டி
தாளிக்க: எண்ணெய் – 1 தே.கரண்டி
வர மிளகாய் – 1
கடுகு – 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாகக் கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்த பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

வெங்காயம் கண்ணாடி போல மாறும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து கலந்து விட வேண்டும்.
தக்காளி முழுவதும் மென்மையாகி குழையும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து கலவையை ஆற விட வேண்டும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து, அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தாளிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிய ஆரம்பித்ததும் வர மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும். பருப்பு நிறம் மாறியதும் இதை சட்னியின் மேல் ஊற்றி நன்றாக கலந்துவிட்டால், அவ்வளவு தான் சுவையான கர்நாடகா ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |