கறிசுவையை மிஞ்சும் ஹைதராபாதி காளான் கிரேவி! இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?
பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி உண்ணும், உணவுகளின் பட்டியலில் காளான் நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.
காளான் சுவைக்கா மட்டுமன்றி பல்வேறு மருத்துவ நன்மைகளுக்காகவும் பெரும்பாலானவர்களால் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றது.
குறிப்பாக காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்யும் தன்மை காணப்படுவதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் போராடுபவர்களுக்கும் காளான் சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு இன்றியடையாதது என்றால் மிகையாகாது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள காளானை கொண்டு அசத்தல் சுவையில், ஹைதராபாதி காளான் கிரேவி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 400 கிராம்
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
சோம்புத் தூள் - 1தே.கரண்டி
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
புளிப்பில்லாத தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
வெங்காயம் - 2 (பொன்னிறமாக ப்ரை செய்தது)
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
அன்னாசிப்பூ - 1
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை
முதலில் காளானை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி, சற்று பெரிய துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து காளானுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புளிக்காத தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினாவையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்நிறமாகும் வரையில் வதக்கி அந்த கலவையில், சேர்த்து, நீர் எதுவும் சேர்க்காமல் கைகளால் நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து குறைந்தது 30 நிமிடங்கள் வரையில், ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு அகலமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ ஆகியவற்றை நேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில், ஊற வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு 3 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில், 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறிவிட்டு மூடி வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு, (முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து காளானை கிளறி விட வேண்டும். )இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையான சுவையில், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஹைதராபாதி காளான் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |