ஹைதராபாத் பாணியில் முட்டை மசாலா குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய உணவுப்பொருட்களின் பட்டியலில் முட்டை நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையானது புரத்ததின் மிகச்சிறந்த மூலமாகும்.
எலும்பு வளர்ச்சி, கூந்தல் வளர்ச்சி, இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் என அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முட்டையை வைத்து ஹைதராபாத் பாணியில் நாவூரும் சுவையில் எவ்வாறு முட்டை குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி - 1 கப்
புதினா - 1 கப்
கிரேவிக்கு தேவையானவை
முட்டை - 8
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
சீரகம் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
தயிர் - 100 மிலி
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
பிரஷ் க்ரீம் - 1/4 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து முட்டைகளை போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து, 20 நிமிடங்கள் வரையில் முட்டைகளை நன்றாக வேக வைத்து இறக்கி குளிரவிட வேண்டும்.
குளிர்ந்த பின்னர் அதன் ஓட்டினை அகற்ற தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவி்ட்டு, 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகம் வரையில் வேகவிட வேண்டும்.
அதன் பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீரை ஊற்றி கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதில் வேக வைத்த முட்டைகளை எடுத்து அதில் ஆங்காங்கு கத்தியால் கீறி விட்டு சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் ஹைதராபாதி முட்டை மசாலா குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |