வெள்ளை பனியாரம், கார சட்னி! அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?
வீட்டில் சத்தான காலை உணவாக குழி பணியாரம் மற்றும் கார சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான தமிழர்களின் வீட்டில் காலை உணவு இட்லி, தோசை என்று இருக்கும். இதனை பலரும் சாப்பிடுவதற்கு தயங்கவும் செய்கின்றனர்.
ஆதலால் சற்று வித்தியாசமாக வெள்ளை குழி பணியாரம், கார சட்னி செய்து சாப்பிடலாம். வாரம் ஒருமுறையாவது இந்த உணவை உங்களது காலை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான வெள்ளை குழி பணியாரம் மற்றும் கார சட்னி ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பணியாரத்திற்கு
மாவு பச்சரிசி - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
வடித்த சாதம் - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
சட்னிக்கு...
வரமிளகாய் - 5
காஷ்மீரி வரமிளகாய் - 5
உப்பு - சுவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 8 பல்

தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயத்தினை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜாரில் அரிசி மற்றும் துருவிய தேங்காய், சாதம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். மாவை பாத்திரத்தில் சேர்த்து உப்பு போட்டு கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
காலையில் எழுந்ததும் பணியார கல்லில் மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும்.

இதற்கு சட்னி செய்வதற்கு கிண்ணத்தில் வரமிளாய் மற்றும் காஷ்மீர் வரமிளகாயை எடுத்து சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
இதனை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். சாப்பர் ஒன்றில் சின்னவெங்காயம், பூண்டு இவற்றினை லேசாக அரைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு,பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்பு மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் காரசட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |