ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் தேன் நெல்லிக்காய்... எப்படி செய்வது?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள கூடிய பழவகைகளின் பட்டியலில் நிச்சயம் நெல்லிக்காய் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் செரிந்து காணப்படுவதால், சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களிலும் நெல்லிக்காய் முக்கியத்துவம் பெறுகின்றது.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
அதுமட்டுமன்றி ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். உடல் எடையை குறைக்க போராடுபவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
குறிப்பாக நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
இது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அந்தவகையில் ஆரோக்கியம் நிறைந்த தேன் நெல்லிக்காயை எவ்வாறு எளிமையாக முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 1 கிலோ
சுத்தமான் தேன் - 1 கிலோ (தேவைக்கேற்ப கூடுதலாகவும் பயன்படுத்தலாம்)
கண்ணாடி அல்லது மூடியிட்ட பீங்கான் ஜாடி
செய்முறை
முதலில் நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் உலரவைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதை இட்லி பானையில் இலேசாக அதன் தோல் மிருதுவாகும் அளவுக்கு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நெல்லிக்காயை கொட்டையில்லாமல் நீள்வாக்கில் வெட்டி இலேசாக தட்டில் பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் இரண்டு தேக்கரண்டி விட்டு நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை ஒரு கைப்பிடியளவு போட்டு நன்றாக குலுக்க வேண்டும்.
பின்னர் மீண்டும் தேன் மீண்டும் நெல்லிக்காய் துண்டுகள் என்று மாறி மாறி சேர்த்து நன்றாக குலுக்கி இறுதியாக எஞ்சியிருக்கும் தேனை முழுவதுமாக ஊற்றி பாட்டிலை நன்றாக குலுக்கி வெயிலில் வைத்து எடுத்தால் அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த தேன் நெல்லிக்காய் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |