Garlic Rice: காரசாரமான பூண்டு சாதம்... ஒரு தடவை இப்படி செய்து பாருங்க
காரசாரமான சுவையில் பூண்டு சாதம் சுலபமாக செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
சாதாரண உணவுகளை சாப்பிட்டு வரும் சிலருக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிடுவதற்கு ஆசைப்படுவார்கள். அதிலும் மதிய உணவு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
கலவை சாதம் என்று அழைக்கப்படும் சாதம், தயிர், லெமன், முட்டைக்கோஸ், கேரட், வெஜிடபிள், பன்னீர், கேப்ஸிகம் போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.
சற்று வித்தியாசமாக பூண்டு சாதம் செய்து சாப்பிடுவதை பழகிக்கொள்ளலாம். தற்போது காரசாரமான பூண்டு சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Credit: Joe Lingeman
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப் ( உதிரியாக வடித்து எடுத்தது)
பூண்டு - 100 கிராம்
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 1 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
பூண்டு சாதம் செய்வதற்கு முதலில் பூண்டை தோல் உரித்து நீளமாக நறுக்கி வைத்துக்கொண்டு, அகலமான கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் இவற்றினை சேர்க்கவும்.
சற்று சூடானதும் அதில் பூண்டை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்மும். கருகாமல் வறுப்பது தான் இதில் மிகவும் முக்கியம். இதில் சிறிதளவு மட்டும் கிண்ணம் ஒன்றில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் இருக்கும் எண்ணெய் மற்றும் பூண்டு இவற்றுடன், சீரகம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை இவற்றினை சேர்த்து தாளித்து, பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதும் அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு இதனுடன் உப்பு, மிளகாய், மல்லி, மிளகு ஆகிய தூள்களை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியாக புதினா மல்லி இவற்றினை சேர்த்துக் கொள்ளவும். பின்பு வடித்து வைத்திருக்கும் சாதத்தினை குறித்த கலவையில் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, 5 நிமிடம் அப்படியே வைத்து கிளறவும்.
இறுதியாக தனியாக எடுத்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து கிளறி இறக்கினால், காரசாரமான பூண்டு சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |