ஆரோக்கியமான ரம்ஜான் நோன்பு கஞ்சி... வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம்?
இஸ்லாமியர்கள் நோன்பு துறக்கையில் மாலை இஃப்தாரின் போது வழங்கப்படும் நோன்பு கஞ்சி எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரமலான் மாதம்
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் முழுவதும் உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக மாலை இஃப்தாரின் போது ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
அதில் முதல் இடம் பெறுவது நோன்பு கஞ்சி தான். இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவு.
நோன்பின் போது நீண்ட நேரம் காலியாக இருக்கும் வயிற்றுக்கு இதைச் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி, நீர் இழப்பு மற்றும் பசியை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இந்த நோன்பு கஞ்சியை வீட்டில் சுலபமாக செய்வதைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1/2 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கோழி/மட்டன் (விருப்பப்படி) - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
குருமா மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயாரிக்கும் முறை :
முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு பெரிய கடாய் அல்லது குக்கரில் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு தக்காளி சேர்த்து நன்கு மசிக்க வைக்கவும்.
தொடர்ந்து மிளகுத்தூள், குருமா மசாலா, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, பின்பு கழுவிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 அல்லது 4 கப் தண்ணீர் ஊற்றி கிளரவும்.
பின்பு குக்கரை மூடி போட்டு 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக விட வேண்டும். விரும்பினால் இறைச்சியையும் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
கடைசியாக தேங்காய் பால், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கினால் ஆரோக்கியமான, சுவையான நோன்பு கஞ்சி தயார்.
நன்மைகள் :
நோன்பு கஞ்சியில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது. தேங்காய் பால் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்தை அளிக்கின்றது.
நோன்பு திறந்தவுடன் செரிமானத்திற்கு எளிதாக இருப்பதற்கு இக்கஞ்சி சிறந்த தெரிவாக இருக்கின்றது
நீண்ட நேரம் உணவு இல்லாததால் நீர் இழப்பு ஏற்படலாம். தேங்காய் பால் சேர்த்ததால், உடலில் நீர்ச்சத்து நன்றாக உள்ளடங்கும்.
நோன்பின் போது உடல் சோர்வாக இருப்பதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |