வீட்டுல இட்லி மாவு இல்லையா? அப்போ சுரைக்காய் வைத்து இட்லி சுடுங்க.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க
இந்தியர்களின் காலையுணவில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை இருக்கும்.
காலையில் என்ன இல்லாவிட்டாலும் இவை இரண்டில் ஒன்று இருக்கும். தினமும் இட்லி சாப்பிடுபவர்களுக்கு காலையில் எழுந்து பார்க்கும் பொழுது தான் இட்லிக்கு மாவு இல்லை என்ற விடயம் தெரிய வந்தது என்றால், அது குறித்து கவலையடைய தேவையில்லை.
வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காய் கொண்டு இட்லி சுடலாம்.
அதாவது, வீட்டில் உள்ள சுரைக்காயை எடுத்து இட்லிக்கு தேவையான மாவை தயார் செய்து கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தருகிறது.
சுரைக்காய் இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை நன்றாக இருக்கும்.
அந்த வகையில், சுரைக்காய் இட்லி எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சுரைக்காய் இட்லி
தேவையான பொருட்கள்:
- சுரைக்காய் - 1
- இட்லி ரவை - 1 கப்
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - சிறிய துண்டு
- கொத்தமல்லி - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- புளித்த மோர் - 1 கப்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
இட்லி செய்வது எப்படி?
முதலில் சுரைக்காய் தோலை நீக்கிவிட்டு, தனியாக துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய சுரைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் இட்லி ரவை கொஞ்சமாக சேர்க்கவும்.
அதன் பின்னர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
தாளிப்பை பாத்திரத்தில் உள்ள சுரைக்காயுடன் சேர்த்து கிளறி விட்டு, புளித்த மோரை ஊற்றி கிளறி விட்டு மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடைசியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 15 நிமிடம் வேக விட்டு எடுத்தால் சுவையான சுரைக்காய் இட்லி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |