பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டனுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
பொதுவாகவே கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படுகின்றது.இதன் பக்க விளைவாக கூந்தல் உதிர்வு அதிகமாகின்றது.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாக அமைகின்றது.
இந்த பொடுகு தொல்லையை போக்கி கூந்தல் உதிர்வை தடுப்பதற்கான இயற்கை வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடுகை நீக்க ...
நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.
பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.
சின்னவெங்காயத்தை அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும். இது பொடுகு தொல்லைக்கு சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.
வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும்.
கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.
வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறான இயற்கை வழிகளில் ஒன்றை கடைப்பிடிப்பதன் மூலம் பொடுகு தொல்லைக்கு இலகுவில் முடிவுக்கட்டி விடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |