சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்? இந்த தவறு மட்டும் செய்யாதீங்க
சிக்கனை ப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம் என்பதையும், அதிக நாட்கள் சேமித்து வைப்பதால் ஏற்படும் பிரச்சனை குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக சாப்பிடும் உணவு தான் சிக்கன். அதிலும் பெரும்பாலானோர் நாட்டுக்கோழியை விரும்பாமல் பிராய்லர் கோழியினையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி கடைக்கு சென்று இறைச்சி வாங்குவதற்கு எரிச்சல் கொண்டு ஆன்லைனில் அமர்ந்த இடத்திலேயே ஆர்டர் போட்டுக் கொள்கின்றனர்.
அவ்வாறு ஆர்டர் போட்டு வாங்கும் சிக்கனையும் உடனே சமைக்காமல் அதனை ப்ரிட்ஜில் சில தினங்கள் சேமித்து வைக்கவும் செய்கின்றனர்.
இவ்வாறு சேமித்து வைக்கும் சிக்கனால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதையும் எத்தனை நாட்கள் ப்ரிட்ஜில் வைக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

எத்தனை நாட்கள் ப்ரிட்ஜில் வைக்கலாம்?
நாம் வாங்கும் சிக்கனை 2 நாட்கள் ப்ரிட்ஜில் சேமித்து வைக்கலாம். அதிலும் ப்ரீசரில் வைத்துவிட வேண்டும்.
முழு சிக்கன் என்றால் ப்ரீசரில் 9 முதல் 12 மாதங்கள் வரை நன்றாக இருக்குமாம். அதுவே வெட்டப்பட்ட சிக்கன் என்றால் 6 முதல் 8 மாதங்கள் வரை நன்றாக இருக்குமாம். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் வெளியே எடுக்கக்கூடாதாம்.
ஏற்கனவே வெட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட சிக்கன் என்றால் 48 மணி நேரம் கூட வைக்கக்கூடாதாம். சிக்கனை சேமிப்பதற்கு ப்ரிட்ஜில் தனியாக ஒரு இடம் வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

எவ்வாறு சேமிக்க வேண்டும்?
பொதுவாக சிக்கனை காற்று புகாதபடியான பாத்திரத்தில் வைத்து சேமிக்கவும். ஏனெனில் காற்று புகுந்தால் பாக்டீரியா தொற்று ஏற்படும். இது மற்ற காய்கறிகள், பழங்கள், பால், தயிர் இவற்றிலும் பரவிவிடும்.
ப்ரிட்ஜில் வைத்த சிக்கனை மீண்டும் பயன்படுத்தும் போது கழுவிய பின்பு பயன்படுத்தவும். மேலும் வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி, மரப்பலவை, பாத்திரம் கழுவும் தொட்டி இவற்றினையும் சுத்தம் செய்துவிடவும். ஏனெனில் இதிலும் பாக்டீரியா பரவும்.
ப்ரிட்ஜிலிருந்து எடுத்ததும் சமைத்துவிட வேண்டும். ஓரிரு மணிநேரம் வைத்தால் சிக்கன் கெட்டுப்போய்விடும்.

மேலும் ப்ரிட்ஜில் உள்ள சிக்கனில் துர்நாற்றம், சாம்பல் அல்லது மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
ப்ரிட்ஜில் சேமிக்கும் இறைச்சியினை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்தால் ஆபத்தாம். ஏனெனில் இவை ஈரப்பதத்தினை தக்கவைத்து பாக்டீரியா ஏற்பட காரணமாகின்றது. ஆதலால் சிக்கனை கண்ணாடி டப்பா அல்லது ஸ்டீல் பாத்திரம் இவற்றில் தான் சேமிக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |